செவ்வாய், 23 ஜூலை, 2013

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில்.


Swami Vivekananda
சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான ஆன்மீகத் தலைவராவார். அவர் வேதாந்தம் மற்றும் யோகம் ஆகிய மரபுகள் கூறும் செய்திகளை உலகெங்கிலும் பரப்ப ஓயாது உழைத்தார். இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.நமது இன்றைய சூழலில் அவரது உற்சாக வார்த்தைகள் நமது அலயன்சின் அங்கத்தினருக்கு எவ்வாறு ஒத்து போகிறது பார்த்தீர்களா? நான் நேசிக்கும் மனிதர்களில் இவரும்  ஒருவர். 
நாத்திகன் யார்? தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன். கடவுள் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்றன பழைய மரபுகள். தன்னம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று நாம் கூறுவதே புதிய மரபு.
அனைவர் உள்ளும் இருக்கும் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று ஒன்று இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே, அப்படி நினைப்பது மிகப்பெரிய பிழை. ‘பாவம்’ என்று ஒன்று இருந்தால் அது இதுதான் — தன்னை பலவீனன் என்று நினைப்பது, அல்லது மற்றவரை பலவீனராக நினைப்பது.
சுதந்திரமாக இரு; எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் — உனது கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் பிறரிடமிருந்து உதவி பெற முயற்சி செய்ததையும் அப்படி ஏதும் வராமற் போனதையும் காண்பாய். வந்த உதவிகள் எல்லாமும் உனக்கு  உள்ளிளிருநந்து வந்தவையாகவே இருக்கும்.
‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதே, ‘என்னால் முடியாது’ என்று ஒரு நாளும் சொல்லாதே, ஏனெனில் வரம்பில்லா வல்லமை கொண்டவன் நீ. சர்வகாலமோ, பரந்த அண்ட வெளியோ கூட உன் உண்மை இயல்போடு ஒப்பிட்டால் ஒரு பொருட்டேயல்ல. நீ எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது அல்ல, மாறாக பலத்தைப் பற்றி சிந்திப்பது தான். மக்களுக்கு, அவர்களுள் இயல்பாகவே உள்ள வல்லமை பற்றி போதிப்பாயாக.
வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான்…. விடாமுயற்சி கொண்டவன், ‘நான் சமுத்திரத்தையும் உட்கொள்வேன்’, ‘என் சங்கல்ப சக்தியால் மலைகளும் நொறுங்கி விழுந்துவிடும்’ என்று சொல்வான். அது போன்ற சக்தியை கொண்டிரு, அது போன்ற மன உறுதியை கொண்டிரு; நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்.
யார் என்ன சொன்னால் என்ன? உனது சொந்த நம்பிக்கையில் உறுதியாக இரு, மற்றவை எல்லாம் நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்…. ‘இவனை நம்பு’, அல்லது ‘அவனை நம்பு’ என்று சொல்வார்கள் சிலர். ஆனால் நான் சொல்கிறேன் கேள், ‘உன் மீது முதலில் நம்பிக்கை வை’, அது தான் ஒரே வழி. உன் மீது நம்பிக்கை வை — எல்லா ஆற்றலும் உன் உள்ளேயே உள்ளன — இதை உணர்ந்து உன் ஆற்றலை வெளிக்கொணர்ந்து வா. ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்,’ என்று சொல். நீ உறுதியாக மறுதலித்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
ஒரு சமயம் நான் காசியில் இருந்தபோது ஒரு பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒருபுறம் நீர் நிறைந்த பெரிய குளமும், மறுபுறம் உயர்ந்த சுவரும் இருந்தன. குரங்குகள் பல உலாவும் இடம் அது. காசியின் குரங்குகள் பற்றியோ கேட்கவே வேண்டாம், மிகவும் பொல்லாதவை! இப்படி நான் நடந்து சென்று கொண்டிருக்கையில் அங்கிருந்த குரங்குகளுக்கு நான் அவ்வழியில் செல்வது பிடிக்கவில்லை போலும். நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சத்தமிட்டபடி என் கால்களை கௌவிக் கொண்டன. நான் தப்பித்து ஒட்டமிட்டேன், அவையும் பின்தொடர்ந்து துரத்தின. நான் வேகமாக ஒடினால் அவையும் அதைவிட வேகமாக துரத்தி வந்து என்னை கடித்தன. இதற்கு மேல் இக்குரங்குகளிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று நான் நினைத்தபோது அவ்வழியில் வந்த ஒருவர், ‘குரங்குகளை எதிர்த்து நில்’ என்று என்னைப் பார்த்து கூவினார். அவர் சொல்படி நான் திரும்பி நின்று குரங்குகளை எதிர்த்தபோது அவை பின்வாங்கி ஒட்டம் பிடித்தன. வாழ்க்கை முழுமைக்கும் இது தான் படிப்பினையாகும் — எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில்.
உன் குறிக்கோளாக ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு விஷயத்தையே உன் வாழ்க்கை முழுவதும் நிரப்பு. அதைப்பற்றியே சிந்தனை செய், அதைப்பற்றியே கற்பனை செய், அதனூடேயே வாழ். உன் மூளை, தசை, நரம்புகள், உடலின் ஒவ்வொரு பாகமும் அந்த விஷயத்தாலேயே நிறைந்திருக்கட்டும், மற்ற எல்லா ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இதுவே வழி. நாம் உண்மையிலேயே மேன்மை பெற — மற்றவர்களும் மேன்மை அடைய உதவ — நம்முள் நாம் மேலும் மேலும் ஆழந்து சென்றாக வேண்டும்.
நாம் எவ்வளவு அதிகமாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக அவ்விஷயம் பற்றிய ஞானம் நமக்கு கிட்டும். ஞானம் அடைய இதுவே வழி. மிகவும் தாழ்ந்தவனாக கருதப்படும் செருப்பு தைப்பவன் கூட, அவன் வேலையில் அதிக கவனம் செலுத்தினால் அவன் வேலையை மேலும் சிறப்பாகச் செய்வான். சமையல் செய்பவன் கவனத்துடன் தன் வேலையைச் செய்தால் சுவையான உணவுகளை சமைப்பான். பணம் சம்பாதிப்பதோ, கடவுளை வழிபடுவதே, எந்த காரியமாக இருந்தாலும் சரி, எவ்வளவு கவனம் செலுத்தப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாக பயன் அமையும். இந்த ஒரு கூப்பாடு, ஒரு தட்டு, இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளத்தை பாய்ந்தோடச் செய்கிறது.
கட்டுப்பாடற்ற, நல்வழி படுத்தப்படாத மனம் நம்மை கீழ்நோக்கி இழுத்து அழித்துவிடும். கட்டுப்பட்ட, நல்வழி படுத்தப்பட்ட மனமோ நம்மை காத்து இரட்சிக்கும், நம் உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும்.
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. நாம் இப்போது இருக்கும் நிலை நம் முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உனக்குள் இருக்கும் ஆற்றலை நீ தான் வெளிக்கொணர்ந்து முன்னேற வேண்டும். வேறு யாரும் உனக்கு கற்பிக்க முடியாது, உன்னை ஆன்மீகவாதி ஆக்கி விடவும் முடியாது. உன்னுள் உள்ள ஆன்மாவைத் தவிர வேறு ஆசான் எவருமில்லை.
மக்கள் பொதுவாக தங்கள் வாழ்வின் குறைபாடுகளுக்கெல்லாம் மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்துகிறார்கள், அது முடியாவிட்டால், கடவுள் மீது பழி சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு அதை தலைவிதி என்று சொல்கிறார்கள்…. விதி எங்கிருந்து வந்தது? விதி என்றால் என்ன? எதை விதைத்தோமோ அதைத் தான் அறுவடை செய்கிறோம். நம் தலைவிதியை எழுதுவது நாமே தான், அதற்கு வேறு எவர் மீதும் பழிசுமத்த வேண்டியதில்லை, வேறு எவரையும் புகழவும் வேண்டியதில்லை. காற்று வீசுகிறது, எவரெவர் தத்தம் பாய்மரத்தை அதற்கு சாதகமாக வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் முன்னேறுகிறார்கள். பாய்மரத்தை சுருட்டி வைத்துக் கொண்டவர்களோ எங்கும் செல்வதில்லை, இது காற்றினுடைய குற்றமா?
உனக்கு நீயே இவ்வாறு சொல்லிக்கொள் — ‘நான் அனுவபிக்கும் இந்த துன்பத்திற்கு என் செயல்களே காரணம். அதனால், என் ஒருவனால் மட்டுமே இந்த துன்பத்தை நீக்க முடியும்.’ என்னால் எது படைக்கப்பட்டதோ அது என்னால் தான் அழிக்கப்பட வேண்டும். பிறரால் படைக்கப்பட்டது என்றால் அதை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில், தைரியத்துடன் இரு, வலிமையுடன் இரு. எல்லா பொறுப்புகளையும் உன்னுடைய தோள்களின் மீது சுமந்துகொள், உன் விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்துகொள். உனக்கு தேவையான எல்லா வலிமையும் உதவியும் உன் உள்ளேயே உள்ளன.
உன் எதிர்காலத்தை நீயே சுயமாக உருவாக்கு. இதுவரை நடந்ததெல்லாம் நடந்து முடிந்துவிட்டது, அதுபற்றி வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. உன் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சிந்தனையும் உன் எதிர்காலத்தை செதுக்குகிறது என்பதை எப்போதும் நினைவில் கொள். தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்ந்து தாக்க எப்போதும் தயாராக இருக்கின்றன, எனினும் உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஓராயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் காப்பதற்கு தயாராக இருக்கின்றன என்ற ஊக்கமளிக்கும் நம்பிக்கையும் உள்ளது.
நம் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது ஒரு வித்து போலாகி நம் சூட்சும உடலில் உறைகிறது. மீண்டும் ஒரு காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு அதற்குரிய பலன்களை அளிக்கின்றது. இந்தப் வினைப் பலன்களே மனிதனின் வாழ்க்கையின் தன்மையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம்மனிதன் தன் வாழ்க்கையை தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எந்த விதிக்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக